திரு.ஜெகத் ரணவக்க

திரு. ஜெகத் ரணவக்க அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் இளமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

திரு. ஜெகத் ரணவக்க அவர்கள் தனது சொந்தக் கம்பனியான ஜெகத் ரொபாட்டிக்ஸ் பிறைவெற் லிமிட்டெட்டினை 1985 ஆம் ஆண்டு ஸ்தாபித்தார். இவர் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், கணினி வன்பொருள் விற்பனை, உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியன உள்ளடங்கலாக நிறுவன முகாமைத்துவத்தில் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார்.

இவர் மேம்படுத்தல், பரீட்சித்தல், நடைமுறைப்படுத்தல், ஆவணப்படுத்தல், தேவைகளை இனங்காணல், பகுப்பாய்வு & வடிவமைத்தல் மற்றும் R&D ஆகியன உள்ளடங்கலாக மென்பொருள் தீர்வு மேம்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவராக முப்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இவர் PLC நிரலாக்கம் (புரோகிராமிங்) உள்ளடங்கலாக இலத்திரனியல் சார்ந்த தொழிற்சாலைகளுக்கான தானியங்கி முறைமைகளை வடிவமைத்தலில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர். இவர் ரஸ்யா (வைத்தியசாலைகளுக்கு கணினி விநியோகித்தல்), கென்யா (ஹோட்டல் முகாமைத்துவ மென்பொருள்/ வன்பொருள் நிறுவுதல்) மற்றும் சிங்கப்பூர் (வன்பொருள், மென்பொருள்) ஆகிய வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

திரு.ஜெகத் ரணவக்க அவர்கள் மென்பொருள் தொழில்துறைக்கான இலங்கை சங்கத்தின் (SLASI) ஸ்தாபக தலைவராவார் அத்துடன் மென்போருள் வடிவமைப்புத் துறையில் மேலும் பல சங்கங்களையும் இலங்கையில் உருவாக்கியுள்ளார். இவர் இலங்கை கணினிச் சமூகத்தின் சக உறுப்பினராவார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு. ஜெகத் ரணவக்க அவர்கள் ரேடியோக்கள், சிறுவர்களுக்கான இலத்திரனியல் சார்ந்த உற்பத்திகள் மற்றும் விளையாட்டுக் கார்கள் உற்பத்தி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். இவர் 1969 ஆம் ஆண்டு ரோயல் யூனியர் பாடசாலையில் தரம் ஏழில் பயிலும் போது இலங்கை பத்தரமுல்லவில் உள்ள திரு.ஜி.டி.தர்மதாச அவர்களால் நிர்வகிக்கப்பட்ட கெப்பிட்டல் ரேடியோ நிறுவனத்தில் ரேடியோ எலக்ரோனிக்ஸ் எனும் டிப்ளோமா கற்கையைப் பயின்றார். இவர் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் அடிப்படை இலத்திரனியல் பாடத்தினைக் கற்றதுடன் 1976ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானப் பட்டப்படிப்பினை கற்பதற்கான தகுதியைப் பெற்றார். இவர் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கற்றுக்கொண்டிருக்கும் போது, பௌதீக இரசாயன விரிவுரையாளரான கலாநிதி துரைசிங்கம் அவர்களின் வேதியியலாளர்களுக்கான கணினி நிரலாக்க விரிவுரைகள் நடைபெறப்போவதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. திரு.ஜெகத் ரணவக்க அவர்கள் அவ் விரிவுரைகளுக்கு சென்றதன் மூலம் கணினி நிரலாக்கத்தில் அறிமுகத்தினைப் பெற்றார். இவர் இரண்டாம் வருடத்தில் பயிலும் போது திரு.வி.கே.சமரனாயக்க அவர்களினால் கற்பிக்கப்பட்ட பிரயோக கணிதப்பாடத்தில் ஒரு பகுதியான FORTRAN நிரலாக்கத்தினை பயின்றார். 1970ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அப்பல்கலைக்கழகத்தில் காட்ஸ் பஞ்சிங் மெசின்ஸ் மாத்திரமே காணப்பட்டது அத்துடன் அதனைத்தொகுப்பதற்காக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பவேண்டியிருந்தது. கணினி நிரலாக்கம் தொகுக்கப்பட்ட தாள் மாணவர்களின் கையை வந்தடைவதற்கு ஒரு மாதத்திற்கும் கூடுதலான காலம் தேவைப்பட்டது.

திரு.ரணவக்க அவர்கள் பட்டப்படிப்பின் பின்னர் தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக முதலில் கொழும்பு 03 இலிருந்த AMS கணினி சேவைகள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார், இந்த நிறுவனம் இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட கணினி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. அந்நிறுவனம் 2K நினைவகமுடைய ICL கணினிகளைக் கொண்டிருந்தது. AMS இன் நிர்வாக இயக்குனராகவிருந்த திரு.சான்டி விஜயசேகர அவர்களால் ஜெகத் ஒரு கணினி செயற்படுத்துனராக இருப்பதை விட ஒரு நிரலாளராக (புரோகிராமர்) இருக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டார் ஏனெனில் அந்நேரத்தில் கணினி அறையினது வெப்பநிலை 60°F ஆக இருந்ததுடன் திரு.விஜயசேகர அவர்கள்  “குளிரான அறைக்குள் வேலை செய்வதற்கு மெலிதாக இரு” என கூறியதை திரு.ஜெகத் ரணவக்க அவர்கள் நினைவுபடுத்திக்கொள்கிறார். அதன் பின்னர் A to Z கணினி சேவைகள் லிமிடெட்டினால் ஒரு விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது, அதில் கலாநிதி மாயா சிற்றம்பலம் ரெயின்போர்ட் அவர்கள் முகாமைத்துவப் பணிப்பாளராக இருந்த இங்கிலாந்தினை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தில் கணினி நிரலாளர்களாகக் கடமையாற்றப் பட்டதாரிகள் தேவையெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமைய விண்ணப்பித்த 300 பேரில் உளச்சார்வுத் தேர்வுப் பரீட்சையில் தோற்றி தெரிவு செய்யப்பட்ட 30 பட்டதாரிகளில் ஒருவராக திரு.ஜெகத் ரணவக்க அவர்கள் காணப்பட்டார். மூன்று மாத கால கணினி நிரலாக்கப் பயிற்சியின் பின்னர், திரு.ரணவக்க அவர்கள் இங்கிலாந்து வாடிக்கையாளருக்காகவும் பர்ரோக்ஸ் கணினிகளின் பயன்பாட்டிற்காகவும் COBOL மொழியில் நிரலாக்கத்தாள்களில் புரோகிராம்களை எழுதினார். அப் புரோகிராம்களை கணினியில் உள்ளீடு செய்வதற்காகவும் தொகுப்பதற்காகவும் ஆரம்பத்தில் (முதல் ஒரு வருடத்திற்கு) இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது. திரு.ரணவக்க அவர்கள் தனது சொந்தக் கம்பனியான ஜெகத் ரொபோட்டிக்ஸ் பிறைவெற் லிமிடெட்டினை ஆரம்பிப்பதற்கு முன்னர் பல நிறுவனங்களில் பணியாற்றினார். அவர் பணியாற்றிய கம்பனிகளில் சில பின்வருமாறு: நிக்ஸ்டோப் கணினிகளைக் கொண்டிருந்த இன்போமெற்றிக்ஸ், BASIC மொழியினை நிரலாக்க மொழியாகக் கொண்ட ஒன்-ரைவ் கனொன், மைக்ரோ கணினிகளை கொண்டிருந்த 3-ஏக்கர் பாம்ஸ், நெக் மைக்ரோ கணினிகளை கொண்டிருந்த பென்ரோன் கம்பியூட்டர்ஸ், ஜெகத் அவர்கள் சிஸ்டம் அனேலிஸ்ட் ஆகவிருந்த MSL கணினி சேவைகள் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனமான எர்ன்ஸ்ட் மற்றும் வின்னே சார்ட்டர்ட் அக்கவுண்ட்டர்ஸ் ஆகியனவாகும்.  ஜெகத் அவர்கள் MSL இல் பணியாற்றும் போது, மக்கள் வங்கியின் சர்வதேச பிரிவினை கணினிமயமாக்குவதற்காக செயற்றிட்டத் தலைவராகவும்  மர்கன்டைல் கிரெடிட் லிமிடெட் கொள்முதல் சிஸ்டத்தினை குத்தகைக்கு எடுத்தல் ஆகியவற்றில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. அங்கு IBM சிஸ்டம் 34 மற்றும் 36 கணினிகள் மற்றும் நிரலாக்கத்திற்காக IBM RPGII மொழியும் காணப்பட்டன. திரு.ஜெகத் ரணவக்க அவர்கள் எர்ன்ஸ்ட் & வின்னேயில் பணிபுரிந்த வேளையில், அமெரிக்காவின் Ohio HIKOK தொழினுட்ப நிறுவனத்தின் கீழ் இயங்கிய தொழினுட்பக் கல்வி நிறுவனத்தில் (ITS) எலெக்ட்ரானிக் அண்ட் மைக்ரோ பிராசசர் மற்றும் மைக்ரோ கம்பியூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகளை மாலை வகுப்பிற்குச் சென்று கற்றுக் கொண்டார்.

திரு.ஜெகத் ரணவக்க அவர்கள் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் இணைவதற்காக ஜெகத் ரொபோட்டிக்ஸ் பிறைவெற் லிமிடெட் கம்பனியினை 1985ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அவர் தனது கம்பனிக்கு “ஜெகத் ரொபோட்டிக்ஸ் பிறைவெற் லிமிடெட்” என பெயரிடக் காரணம் என்னவெனில் ஜெகத் என்றால் “சர்வதேசம்” மற்றும் ரொவபோட்டிக்ஸ் என்றால் “தன்னியக்கம்”. ஜெகத் அவர்கள் மென்பொருள் மேம்பாட்டில் மட்டும் ஈடுபட விரும்பவில்லை அத்துடன் அவர் IBM கெம்பாற்றிவிள் கணினிகளை விற்பனை செய்யவும் ஆரம்பித்தார் (இது இலங்கையில் முதல் தடவை எனக் கூறுகிறார்), பிறின்ரர்ஸ், டிஜிற்றைஸர்ஸ், புலொட்டர்ஸ், LCD டிஸ்பிளே புரோஜக்டர்ஸ் (இலங்கையில் முதல் தடவை) என்பன வேறுபட்ட நாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. அத்துடன் பிறின்ரர் செயாரர்ஸ், தொலைபேசி பதிவுகள், PABX அழைப்பு தரவு பதிவு மென்பொருள் மற்றும் இலத்திரனியல் சார்ந்த உற்பத்திகள் அனைத்தும் “JRL” என அடையாளமிடப்பட்டு உற்பத்தி செய்யும் செயற்பாட்டினையும் முன்னெடுத்தார். மேலும் திரு.ரணவக்க அவர்கள் இலங்கை புகையிலை நிறுவனத்திற்காக சிகரட்டுக்களை எண்ணும் முறைமை மற்றும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் பேராகல   (கப்புத்தல) இல் அமைந்திருந்த நிலச்சரிவு எச்சரிக்கை முறைமை ஆகிய தன்னியக்க செயற்றிட்டங்களையும் முன்னெடுத்ததார்.

1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசாங்க அமைச்சுக்களில் பணியாற்றிய முகாமையாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்றவர்களை பயிற்றுவிப்பதற்காக அவ் அமைச்சுகளுக்கு கணினிகள் விநியோகிப்பதற்கான ஓடர்கள் JRL ற்குக் கிடைத்தது. இவ்வாய்ப்பு கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரியின் 150வது ஆண்டு கண்காட்சியின் போது JRL இன் கடைத்தொகுதிக்கு பிரதமர் பிரேமதாச அவர்கள் வருகை தந்தமையினால் கிடைத்தது. அங்கு JRL இனைக் கண்ணுற்ற பிரதமர் பிரேமதாச அவர்கள் மிகவும் கவரப்பட்டதன் காரணமாக தனது பொறுப்பில் சகல அமைச்சுக்களுக்கும் கணினிகளை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார், அவ் அமைச்சுக்களின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் பொறியியலாளர்களுக்கும் JRLஇல் பயிற்சியளிக்கப்பட்டது. அப் பொறியியலாளர்கள் தமது நாளாந்த வேலைகளைச் செய்யும் போது பயன்படுத்துவதற்கேற்ற பலதரப்பட்ட அப்ளிகேசன்களைப் பற்றி JRL பயிற்றுவித்தது. அதில் விரிதாள்கள் (ஸ்பரட்சீற்ஸ்) பயிற்சிக்காக “Lotus 123”,சொல் செயலாக்கத்திற்காக “Word Star”, தரவுத் தளத்தினை கையாள்வதற்காக “dBase II” , கணினி உதவியுடன் வடிவமைப்பு மற்றும் வரைவு உருவாக்கத்திற்கு “AutoCad” மற்றும் கட்டிட அமைப்பு பகுப்பாய்வு வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்விற்கு “Microfeap” ஆகியவற்றினைப்  பயன்படுத்தி பொறியியலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். இவ் வகுப்புக்கள், கணினி மதிப்பீடு, கணினி எழுத்தறிவு மற்றும் பல பிரிவுகளில் பிரபல்யமானதாக இருந்ததுடன் மருத்துவ அதிகாரிகள், கணக்காளர்கள், வணிக முகாமையாளர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலதரப்பட்டவர்களை உள்வாங்கியிருந்தது. கணினி வகுப்புக்களைப் பின்பற்றிய நிபுணர்களுக்கு IBM கெம்பாற்றிவிள் கணினிகளை விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் JRL இற்கு உருவானது. JRL பயிற்சி நிறுவனத்தில் விரிவுரை நடத்துவதற்கு திரு.ரணவக்க அவர்களுக்கு மேலதிகமாக, நீர்பாசனத் திணைக்களத்தில் கட்டிட பொறியாளராகப் பணியாற்றிய திரு.என்.மதசுயனன் மற்றும் பட்டயக் கணக்காளரான திரு.சிறீலால் அகங்கம மற்றும் வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்வு (பைனைட் எலிமன்ஸ் அனேலிஸிஸ்) விரிவுரைகளை வழங்கிய கலாநிதி தயா ரணவீர ஆகியோரினைக் குறிப்பிடலாம்.

1988ஆம் ஆண்டு JRL ஆனது உலகின் பல பாகங்களிலும் இருந்தும் கணினி பாகங்களை இறக்குமதி செய்து அதனை கணினிகளாக ஒருங்கிணைத்தது, அத்துடன் மடிக் கணினிகளையும் இறக்குமதி செய்ததுடன் அவற்றில் JRL என அடையாளமிட்டு இலங்கையின் முதல் முதலாக விநியோகம் செய்தது. அத்துடன் இக் கணினிகளுக்கான ஓடர்கள் ரஸ்யா மற்றும் நெதர்லாந்து நாடுகளிலிருந்து பெறப்பட்டது. JRL ஆனது 1996 ஆம் ஆண்டில் தமது கணினி ஒருங்கிணைக்கும் செயற்பாட்டினை இடைநிறுத்தும் வரை கணினி ஏற்றுமதிகளை மேற்கொண்டது.

திரு. ஆதுர் சேனாநாயக்க அவர்கள் ஜெகத் ரொபோட்டிக்ஸ் இல் முதன் முதலில் கணினியைக் கொள்வனவு செய்த வாடிக்கையாளராக இருந்தார், இவர் பின்னாளில் ஜெர்மேனியா பிறைவெற் லிமிடெட் (இது ஒரு இரும்பு இறக்குமதி செய்யும் கம்பனி) இல் முகாமைத்துவப் பணிப்பாளராக இருந்தவர். இது 1985 ஆம் ஆண்டு இடம்பெற்றது. இரண்டாவது கணினியானது கொழும்பு கங்காராம விகாரையின் தேரரான “பொடி ஹாமுதுருவோ” அவர்கள் கொள்வனவு செய்திருந்தார். இவர் தமது விகாரைக்கு வரும் பக்தர்களின் முகவரி பட்டியலை கணினி மயப்படுத்தி வடிவமைப்பதற்காகவும் அவற்றினை ஒரு நினைவகத்தில் சேமிப்பதற்காகவும் அக்கணினியைக் கொள்வனவு செய்திருந்தார், இதன் மூலம் அத் தகவல்களை கையாளும் முறை இலகுவானதுடன் கடிதங்களில் கணினியிலிருந்து அச்சிடப்பட்ட முகவரி லேபிள்களை ஒட்டுவதும் சாத்தியமானது. பின்னர் “பொடி ஹமுதுருவோ” அவர்கள் மாணவர்களை இலவசமாகப் பயிற்றுவிப்பதற்காக ஒரு பயிற்சி நிலையத்தினை உருவாக்கவேண்டி ஏற்பட்டது. இதனால் JRL ஆனது 1986 ஆம் ஆண்டு அந்த விகாரையில் ஒரு பயிற்சி நிலையத்தினை   ஆரம்பித்தது அத்துடன் ஆறு கணினிகளுடனான ஜினாரத்தனா தொழில்பயிற்சி நிலையத்தினை நிர்வகித்தது.

1986 ஆம் ஆண்டில் “மஹநமா” சிங்கள விசைப்பலகைக்காக காப்புரிமை பெற்ற திரு. சபுதந்திரி எஸ். பி. மகாநாமாவால் உருவாக்கப்பட்ட சிங்கள மொழி சொல் செயலியை JRL விற்பனை செய்ய ஆரம்பித்தது. இச் சொல் செயலியானது இலங்கையில் பல அச்சிடும் நிறுவனங்களில் மிகவும் பிரபல்யமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களும்எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இதனைப் பயன்படுத்தியுள்ளார். திரு. மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரதமராக இருந்த போது2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் JRL நிறுவனத்தால் சிங்கள சொல் செயலியின் பிரதியொன்று அவருக்கு வழங்கப்பட்டது.

1988ஆம் ஆண்டில் JRL நிறுவனம் தனது முதலாவது கிளை ஒன்றை மாத்தறையில் ஆரம்பித்தது, இது அல்ஸ்டோம் ராட்யூ எனும் ஒரு பிரெஞ்சு நிறுவனத்தினால் ஒப்பந்தமிடப்பட்ட நில்வளவை கங்கையின் மதகினை தன்னியக்கப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில் சேவையாற்றுதற்காக ஸ்தாபிக்கப்பட்டது. இவ் முயற்சி முன்னெடுக்கப்பட்ட அதே நேரத்தில், தென்னிலங்கையின் முதல் கணினி பயிற்சி நிலையமொன்று மாத்தறையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அவ் நிலையம் தெற்கிலிலுள்ள கணினி செயற்பாட்டாளர்கள், நிரலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காகவும் அத்துடன் அங்குள்ள கடைகள் மற்றும் அதிகாரிகளுக்கு கணினிகள் மற்றும் மென்பொருள்களை விற்பனை செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. அவ் நிலையத்தில் கணினி பயிற்சி வகுப்புக்களை பின்பற்றிய மாணவர்களில் அதிகமானோர் அப்பகுதிகளில் கணினி செயற்படுத்துனர்களாக வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் JRL கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் (அதாவது 1989 ஆம் ஆண்டு) அந் நேரத்தில் பயன்படுத்தப்படாமலிருந்த நூப் சந்தியிலுள்ள ஒரு பழைய சந்தைக் கட்டிடத்தில் இதே போன்ற ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தினை மாத்தறையில்  ஸ்தாபிப்பதற்கு “பொடி ஹமுதுருவோ” அவர்களுக்குத் தேவையேற்பட்டது. 1989 ஆம் ஆண்டு JRL கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சிகளைப் பார்வையிட்டமையினால் தென் மாகாணத்திலிருந்த அதிகமான மாணவர்கள் கணினி பற்றிக் அறிந்திருந்தனர். பயிற்சி நிலைய ஆரம்ப விழாவின்போது இலவச பயிற்சி வகுப்புக்களுக்கு தெரிவு செய்யப்படுவதற்காக அண்ணளவாக 6500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் அத்துடன் அம் முயற்சியை ஆரம்பிக்கும் போது நிலையத்தில் ஆறு கணினிகள் மட்டுமே காணப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, விண்ணப்பதாரிகளுக்கு முதலில் தட்டச்சு பயிற்சி வழங்குவதற்காக 100 தட்டச்சு இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டது அத்துடன் ஒரு வாரத்திற்கு, ஒரு மாணவனுக்கு அரை மணிநேர தட்டச்சு மற்றும் கணினி பயிற்சியும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களில் அதிகமானோர் JRL இல் கணினிகளை கொள்வனவு செய்த நிறுவனங்களில் உடனடியாக வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டனர். JRL ஆனது 1989 இல் விசேடமாக தோட்டப்புறங்களுக்கான மென்பொருள் மேம்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தது, மற்றும் 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஹோட்டல்களுக்கான மென்பொருளை தயாரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தது. JRL ஆனது 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் பல ஹோட்டல்களை கணினிமயப்படுத்தியதுடன் கென்யாவின் மொம்வாசாவிலுள்ள பல ஹோட்டல்களுக்கு மென்பொருளை ஏற்றுமதி செய்தது. அரச துறை தோட்டங்கள் மிக விரைவில் தனியார் மயப்படுத்தப்பட்டன அதாவது ஹேலீஸ் குறூப் லிமிடெட் இனால் நிர்வகிக்கப்பட்ட தலவாக்கல கொல்ரூட் எஸ்ரேற் இனது கண்காணிப்பாளராகவிருந்த திரு.ஏ.ஆர்.எம்.அசாட் இன் வசமானது, அத்துடன் எஸ்ரேற் பிரிவினது தினசரி பணம் பெறும் தொழிலாளர்களின் ஊதியத்தினை கையாள்வதற்கான ஒரு திட்டத்தினை ஆய்வு செய்வதற்கும் வடிவமைப்பதற்குமான வாய்ப்பு JRL ற்கு வழங்கப்பட்டது. இது JRL ஆனது பெரிய தனியார்துறை தோட்டத்தொழில் நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு சாத்தியமானது. திரு.ரணவக்க அவர்கள் மென்பொருள் சந்தைப்படுத்தும் முறையினை “மென்பொருள் ஒரு சேவையாக” (SAAS) என 1996 ஆம் ஆண்டு மாற்றினார். அத்துடன் மென்பொருளை வாடகைக்கு விடப்படும் ஒரு உற்பத்தியாக கொண்டு, ஒரு எஸ்ரேற்றுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு என கட்டணத்தினை அறவிட்டார். திரு.ரணவக்க அவர்கள் இன்று வரை பின்பற்றுகின்ற ஒரு பாரிய விடயம் இதுவாகும்.

SLASI

1994 ஆம் ஆண்டு, திரு.ரணவக்க (ஸ்தாபக தலைவர்) உட்பட இலங்கையில் மென்பொருள் வடிவமைப்புப் பிரிவில் பணியாற்றிய ஆறு பேரின் பங்களிப்புடனும், CINTEC (இலங்கை கணினி தகவல் மற்றும் தொழிநுட்பப் பேரவை (இது பின்னாளில் தகவல் தொழினுட்பப் பேரவை என பெயர் மாற்றப்பட்டது) இன் தலைவராகவிருந்த பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்களின் ஆதரவுடனும் மென்பொருள் தொழில்துறைக்கான இலங்கைச் சங்கம்(SLASI) உருவாக்கப்பட்டது.

SLASI உருவாக்கப்பட்டு சிறிது காலத்தின் பின்னர், பின்னாளில் ஜேர்மன் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக இருந்த கௌரவ கரு ஜெயசூரிய அவர்கள் மற்றும் தூதரகத்தின் வணிகச் செயலாளராகவிருந்த திரு.பி.டி.பெர்னான்டோ அவர்களினதும் அழைப்பின் பேரிலும் இலங்கையின் தகவல் தொழினுட்ப உற்பத்திகளை தரமுயர்த்தும் நோக்கில் ஜேர்மனியில் நடைபெற்ற “செவிற்” கண்காட்சிக்கு JRL விஜயம் செய்தது. அந்த கண்காட்சியின் போது செவிற் ஆணையகத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்த திரு.ஜெயசூரிய மற்றும் இலங்கை பிரதிநிதிகள் குழுவினர், 1995 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மென்பொருள் விற்பனைத் துறையினருக்கு ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியளிப்பினைக் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இவ்வாறாக JRL ஆனது தனது ஹோட்டல் மென்பொருளை ஏற்றுமதி செய்வதற்கான முன்னெடுப்புக்களில் உள்வாங்கப்பட்டிருந்தது.

SEARCC 95

திரு.ரணவக்க அவர்கள் 1995ஆம் ஆண்டு இலங்கைக் கணினிச் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருந்த போது SEARCC (தென்கிழக்கு ஆசிய பிராந்திய கணினி கூட்டமைப்பு) இனால் இலங்கையில் முதன் முதலில் நடைபெற்ற சர்வதேச கணினி மாநாடு மற்றும் கண்காட்சிக்கு செயலாளராகக் கடமையாற்றியதனை திரு.ரணவக்க நினைவு கூர்கிறார். தலைவரான திரு.யாஸா கருணாரெத்ன, செயலாளரான திரு.ஜெகத் ரணவக்க மற்றும் பேராசிரியர் அபய இந்துருவ குழுவினர் இவ் மாநாட்டினையும் கண்காட்சியினையும் தரமுயர்த்துவதற்காக இப்பிராந்தியத்திலுள்ள பல நாடுகளுக்கு தமது சொந்த செலவில் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு மோசமான வரிவிதிப்பு விதிக்கப்பட்டமையின் பாதகமான விளைவுகளின் காரணமாக 1996 ஆம் ஆண்டில் JRL தனது கணினி வன்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவுகளை மூட வேண்டிய நிலை உண்டானதாக திரு.ரணவக்க அவர்கள் மேலும் நினைவுபடுத்துகின்றார். அதே சமயம், கடன் தகவல் மையம் (CRIB – பிளாக்லிஸ்டிங்) இல் தவறான பட்டியல் காரணமாக JRLக்கு அனைத்து வங்கிகளிலிருந்தும் நிதியைப் பெறுவது தடைப்பட்டதன் காரணமாக அதன் வியாபாரத்தை முன்னெடுப்பது கடினமாக இருந்தது, இந்த நிலை 2006 இல் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டது.

JRL ஆனது பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் நடவடிக்கைகளை முழுமையாக தன்னியக்கப்படுத்துவதற்கு மென்பொருள்களை தொடர்ச்சியாக வடிவமைத்ததுடன் தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அவ் மென்பொருளை நியாயமான விலைக்கு குத்தகைக்கு வழங்கியது. தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்ட முகாமைத்துவத்தினை மேலும் மேம்படுத்துவதற்காகவும் செயற்பாடுகளின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும் என புதிய முறைகளை JRL பின்பற்றியது. தற்போது JRL ஆனது இலங்கையில் 200 ற்கும் மேற்பட்ட பெருந்தோட்டங்களை கணினிமயமாக்கியுள்ளது. இதன் உடனடியான எதிர்காலத் திட்டம் என்னவெனில், தகவல்களை மீள் பெறுவதற்காக மொபைல் மற்றும் இணையம்சார் ஆப்ளிகேசனை தயாரித்து வழங்குவதாகும்.

தொகுப்பு