திரு. எஸ். சண்முகராஜா (ஷான்) மென்பொருள் துறையில் கடந்த 19 ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மற்றும் ஓர் அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணராக இருக்கின்றார். அவர் மொபைல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர், அதில் அவர் கடந்த பத்து வருடங்களாக கவனம் செலுத்தியுள்ளார். அண்ட்ராய்டு, iOS, .NET, ஜாவா மற்றும் மிடில்வேர் ஆகியவற்றில் திறன்களைக் கொண்ட தொலைத் தொடர்பு மென்பொருள் மேம்பாட்டில் அவர் முழுமையாக ஈடுபட்டுள்ளார். இவர் இந்தியாவின் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் இளமானிப் பொறியியல் பட்டம் பெற்றவர். அவர் தற்போது எம்.பிரைன் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை உட்கட்டமைப்புக் கலைஞராக உள்ளார்.
ஷான் இலங்கையின் ICT நிறுவகத்தின் (ICTA) உள்ளூர் மொழிகளுக்கான ICT யில் வெளிவாரி ஆலோசகராக இருந்தார். விண்டோஸிற்கான விசைப்பலகை இயக்கிகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார், இது இலங்கை சிங்கள தரநிலை SLS 1134: 2004 மற்றும் இலங்கை தமிழ் தரநிலை SLS 1326: 2008 இற்கு ஏற்ப, தட்டச்சு செய்ய உதவியது. இவை ICTA இன் வலைத்தளத்திலிருந்து கிடைக்கக்கூடியன, மேலும் பல பயனர்களுக்கு நீண்ட காலமாக சிங்கள மற்றும் தமிழில் தரநிலைகளில் சீரமைக்கப்பட்ட ICT யைப் பயன்படுத்த இது உதவியது. இவர் மைக்ரோசாப்ட் – இலங்கை நிறுவனத்தின் வெளிவாரி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். ஷான், ICTA மூலம், 2010/2011 இல் நடந்த தென்னாசிய மொபைல் மாநாட்டில் mBillionth விருது கிராண்ட் ஜூரியின் ஜூரராக இருந்துள்ளார். 1998 இல் அவர் மைக்ரோஇமேஜில் இணைந்தார், சிங்கள மொழியில் தட்டச்சு செய்வதற்கான விசைப்பலகை இயக்கிகளை உருவாக்குவதில் ஷான் முக்கிய பங்கு வகித்தார்.
சுருக்கமான காணொளி
முழுமையான காணொளி
திரு. எஸ். சண்முகராஜா (ஷான்) சிறுவனாக இருந்த போதே பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் இருந்தபோது, அவரது பள்ளி ஒரு கணினி ஆய்வகத்தை அமைத்தது. இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்தி கணினி அரங்கில் உள்வாங்கப்படலாம் என்று ஷான் அப்போது நினைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக, கணினிச் செயல்முறைக்குப் பொறுப்பில் இருந்த ஆசிரியர் இந்த பாடத்தில் மிகவும் துறைதேர்ந்தவராக இருக்கவில்லை. அந்த ஆசிரியருக்கு கற்பிக்கத் தொடங்குவதற்கு முன்பு கணினி விஞ்ஞானம் குறித்த ஒரு வார பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டது. இந்தப் பகுதியை நோக்கி ஒரு விருப்பத்தை வளர்த்துக் கொண்ட ஷான், ஒரு கணினி செயல்படும் முறையைத் தானே கண்டுபிடிக்க முயற்சிக்கத் தொடங்கினார். பின்னர், ஷான் இந்தியாவின் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானப் பொறியியல் பட்டம் படித்துக்கொண்டிருந்தார், அங்கு கணினி ஆய்வகத்தில் மீண்டும் கணினி அறிவைத் தேடுவதில் ஒரு தடையை ஷான் எதிர்கொண்டார். பல்கலைக்கழக ஆய்வக உதவியாளர் கணினி ஆய்வகத்தை மாணவர்களுக்கு வழங்குவதையும் அவர்கள் கணினியை அணுகுவதனையும் கட்டுப்படுத்தினார். அது 1993 ஆம் ஆண்டு. கணினிகள் விலை உயர்ந்தவையாகவும், யாரும் வீட்டில் கணினி வைத்திருப்பது அரிதாகவும் இருந்தது. ஆனால் ஒரு கணினி வாங்க முடியுமா என்று ஷான் தனது தந்தையிடம் கேட்டார். அவர் பெற்ற முதல் கணினி ஒரு i386 இயந்திரம், அதனை அவர் தனது அறையில் வைத்தார், மேலும் அவர் விஷுவல் பேசிக் உடன் விரிவான நிரலாக்கத்தினை தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில், ஷான் கணினி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்று இலங்கைக்குத் திரும்பினார்.
பின்னர், இவர் இணையத்தள மேம்பாடு குறித்த ஒரு குறுகிய பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதற்காக 1999 இல் மீண்டும் இந்தியா சென்றார். அப்போது இணையத்தளப் பக்கங்கள் நிலையானதாகவே பயன்படுத்தப்பட்டன. விஷுவல் பேசிக் ஆனது, டெஸ்க்டாப் செயலிகள் உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஊடாடும் இணையத்தளங்களை உருவாக்கவே ஷான் விரும்பினார். எனவே, அவ்வாறான இணையத்தளப் பக்கங்களை உருவாக்குவதற்கு ஏஎஸ்பி (ASP) பற்றி தன்னால் முடிந்த அனைத்தையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஷான் ஒரு சிறிய ஊடாடும் வலைப்பக்கத்தை உருவாக்கினார், இதன் மூலம் தரவை வாடிக்கையாளரின் பக்கச் சரிபார்ப்புடன் ஒரு தரவுத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும். அதன்பிறகு, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் உள்ள முழு மனிதவளப் பயன்பாடும் டெஸ்க்டாப் செயலியிலிருந்து வலைத்தள அடிப்படையிலான பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, .NET கிடைத்தது மற்றும் செயலிகள் டெஸ்க்டாப் செயலியிலிருந்து இணைய அடிப்படையிலான செயலிகளுக்கு மாற்றப்பட்டன.
திரு. சண்முகராஜா இலங்கையில் மைக்ரோஇமேஜ் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் ஷானுக்கு வழங்கப்பட்ட முதல் பணி சிங்களத்தில் ஒரு விசைப்பலகை இயக்கி எழுதுவது. விசைப்பலகை இயக்கி என்ன என்பது பற்றி ஷான் பெரிதாக அறிந்திருக்கவில்லை அல்லது பிரபலமான விசைப்பலகை தளவமைப்புகளில் போதியளவு அறிவு இருக்கவில்லை. பின்னர், அவரின் ஒரு நண்பரான ஹிரான், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட விசைப்பலகை அமைப்பின் தளவமைப்பின் படி, J என்ற ஆங்கில எழுத்தை அழுத்தும் போது ව சிங்கள எழுத்து வர வேண்டும் என்றும், S எழுத்தை அழுத்தும் போது அது சிங்கள அலபில்லாவுக்கானது என்றும், இரண்டையும் அழுத்தும் போது වි வர வேண்டும் என அவருக்கு அறிவித்தார்.
இதைக் கருத்தில் கொண்டு சிங்கள விஜேசேகர தளவமைப்புக்கு ஒரு விசைப்பலகை இயக்கியை திரு. சண்முகராஜா எழுதத் தொடங்கினார். அதன்பிறகு, அவர் ஒரு ஒலிப்பு விசைப்பலகை இயக்கி மற்றும் ஒரு தமிழ் விசைப்பலகை இயக்கி ஆகியவற்றை உருவாக்கினார், மேலும் 1998 ஆம் ஆண்டில் இந்த விசைப்பலகை இயக்கிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஹெலவதான என்ற தொகுப்பை வெளியிட்டார். ஹெலவதானா மிகவும் பிரபலமாக இருந்தது. உள்ளூர் மொழிகளில் ICT யை சாத்தியமாக்குவதற்கு ஷான் உள்வாங்கப்பட்டார்.
மக்கள் நோக்கியா தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள், ஆரம்பத்தில் நோக்கியா தொலைபேசிகளில் வெளிப்புற செயலிகளை அறிமுகப்படுத்த முடியவில்லை. 2003 ஆம் ஆண்டில் ஷான் இந்தியாவில் இருந்தார், அங்கு ஒரு நண்பர் நோக்கியா 8910i ஐப் பயன்படுத்துவதைக் கண்டார், அதில் ஜாவா சின்னம் இருந்தது. அந்தத் தொலைபேசியை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் இயக்கும் நோக்கில் இரவலாக வாங்கினார். அவர் உள்ளூர் மொழிகளின் பகுதியைத் தொடங்கியபோது அவர் செய்த முதல் காரியமான වි இனைப் பெற முயன்றார். ஆனால் கையடக்கத் தொலைபேசிகளில் சிங்கள எழுத்துருக்கள் எதுவும் இல்லை. எனவே, ஷான் கையடக்கத் தொலைபேசியில் ව இற்கான படங்களை உருவாக்கினார் மற்றும் அலபில்லாவுக்காக படங்களை உருவாக்கி, ஒருவாறாக சிரமப்பட்டு වි இனைப் பெற்றார். அது වි! போல் தோற்றமளித்ததாக அவர் கூறுகிறார். மொபைல் சாதனங்களில் ஷான் சந்தித்த மற்றொரு சிரமம், ஒவ்வொரு விசைக்கும் 3 எழுத்துக்கள் இருப்பதுதான். ஆனால் சவால்களை முறியடித்து முழு சிங்கள எழுத்தையும் விசைகளில் அமைக்க அவரால் முடிந்தது. அதன்பிறகு, நோக்கியா ஜாவா தொலைபேசிகளை J2mv தொலைபேசிகள் எனத் தயாரிக்கத் தொடங்கியது. திரு. சண்முகராஜா தனது தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஹர்ஷா புரசிங்கத்திற்கு சிங்களத்தை மொபைல்களில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார், இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். டயலொக்கில் திரு. ஹான்ஸ் விஜயசூரியாவை அவர்கள் பார்வையிட்டனர், இது வெளியிடப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இது 2004 அல்லது 2005 இல் வெளியிடப்பட்டது. இது மிகவும் பிரபலமானது மற்றும் பல பயனர்கள் இத் தொகுப்பைப் பதிவிறக்குகிறார்கள். மென்பொருளுக்கு ரூ. 150/00 இனை மைக்ரோஇமேஜ் அறவிட்டது. ஆனால் இது யூனிகோட்டிற்கு இணக்கமாக இல்லை. அவர்கள் ஆங்கில எழுத்துருவின் மேல் சிங்கள எழுத்துப் படங்களை திணித்திருந்தனர். அண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களுக்கான உள்ளீட்டு அமைப்புகளையும் அவர் உருவாக்கியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில், திரு. சண்முகராஜா, இலங்கையின் ICT நிறுவனத்தினால் (ICTA) ஏற்பாடு செய்யப்பட்ட யூனிகோட் தரநிலைகளுக்கான ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தனித்துவமான குறியீடு இருப்பதையும், அனைத்து சிங்கள எழுத்துகளிற்கும் கிளிஃப்களையும் கொண்டு வர முடியும் என்பதையும் அவர் உணர்ந்தார். 2004 ஆம் ஆண்டில், சுனாமி பேரழிவிற்குப் பிறகு தகவல்தொடர்பு, தகவல்களை பரப்புதல் மற்றும் சிங்களத்தில் பட்டியல்களை உருவாக்குதல் (காணாமல் போனவர்களின்) போன்றவற்றிற்காக விண்டோஸ் XP மற்றும் Office 2003 க்கான சிங்கள செயல்படுத்தல் தொகுப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியது. இந்த நேரத்தில் பேராசிரியர் கிஹான் டயஸ் ICTA இல் உள்ளூர் மொழிகள் முயற்சிக்கு தலைமை தாங்கினார். ICT சிங்கள தரநிலை SLS 1134: 2004 உடன் இணைக்கப்பட்ட சிங்கள விசைப்பலகை இயக்கி ஒன்றை உருவாக்குவது குறித்து ICTA ஷானுடன் ஒப்பந்தம் செய்தது. இது ICTA இணையதளத்தில் கிடைத்தது. அதே நேரத்தில், எழுத்துரு உருவாக்குநர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் பயனர்கள் உள்ளிட்ட பொதுப் பயனர்களை இலக்காகக் கொண்டு யூனிகோட் தரத்தை கடைப்பிடிப்பதன் நன்மைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு அமர்வுகளை ICTA நடத்தியது. அதிலிருந்து, யூனிகோட்டிற்கு இணக்கமான உள்ளூர் மொழிகளில் மக்கள் ICT யைப் பயன்படுத்தத் தொடங்கினர். இது ஒரு திருப்புமுனையாகும்.
ஷான் அத்தோடு நிற்கவில்லை. இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் திவேஹி போன்ற பிற மொழிகளுக்கான விசைப்பலகை உள்ளீட்டு முறைமைகளின் மேம்பாட்டினைத் தொடர்ந்தார். உள்ளூர் மொழி எழுத்துருக்களைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி கவலைப்படாமல் நாம் தடையின்றி தட்டச்சு செய்யக்கூடிய ஒரு சகாப்தத்தில் இப்போது இருக்கிறோம் என்று ஷான் கூறுகிறார்.
இறுதியாக, IIT மற்றும் CICRA ஆகியவற்றில் ஆண்ட்ராய்டு நிரலாக்கம் மற்றும் செயலி பாதுகாப்பு குறித்த விரிவுரையாளராக இருந்ததாக ஷான் கூறுகிறார். அவர் இளைய தலைமுறையினருக்கு கட்டத்திற்கு வெளியே சிந்திக்கவும், புதுமைப்படுத்தவும், நிஜ வாழ்க்கை அனுபவங்களை தொழில்நுட்பத்துடன் இணைக்கவும் கற்றுக்கொடுக்கிறார். இது போட்டியை உருவாக்குகிறது, ஆனால் இது புதுமையை ஏற்படுத்தாது என்று ஷான் வலியுறுத்துகிறார். இளைய தலைமுறையினருக்கு அவர் அளிக்கும் அறிவுரை என்னவென்றால், ஒரு பிரச்சினையை எடுத்துரைத்து, அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள், இதனால் மக்களுடன் இணைந்து முழு நாடும் பெரிய அளவில் பயனடையும். என்னென்ன உருவாக்கப்பட்டதோ, இறுதியில் அவை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.