திரு. லால் சந்திரநாத் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் DMS சாப்ட்வேர் டெக்னாலஜீஸ் இன் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (DMS) இன் ஸ்தாபகக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், ஜூன் 2017 வரை அதன் பணிப்பாளராகப் பணியாற்றினார். 1981 ஆம் ஆண்டில் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஸ்தாபகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அங்கு அவர் ஜூன் 2017 வரை பணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் 2014 ஆம் ஆண்டில், DMS சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் / பொது முகாமையாளராக திரு. சந்திரநாத் நியமிக்கப்பட்டார், மேலும் Oracle கோர்ப்பரேஷனுடன் வணிக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். திரு. சந்திரநாத் ICT துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார் அத்துடன் பொறியியல், வாடிக்கையாளர் ஆதரவு, மென்பொருள் மேம்பாடு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் போன்ற தகவல் தொழில்நுட்ப துறைகளில் அனுபவம் பெற்றவர்.
திரு. சந்திரநாத் இலங்கை ICT நிறுவனத்திற்கு (ICTA) முன்னர் ICT இல் உயர் தீர்மானங்களை மேற்கொண்ட நிறுவனமான தகவல் தொழில்நுட்ப பேரவையில் (CINTEC) 1992-1996 & 1999-2000 வரையான காலப்பகுதியில் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். திரு. சந்திரநாத் CINTEC இன் தேசிய தகவல் ஒலிம்பியாட் குழுவின் தலைவராக இருந்தார். இவர் இலங்கை கணினிச் சங்கத்தின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஆசிய மற்றும் சர்வதேச மென்பொருள் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை மாணவர் அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதன் விளைவாக இலங்கைக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
திரு. சந்திரநாத் கண்டியின் கிங்ஸ்வுட் கல்லூரி மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு அவருக்கு மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் (ஹான்ஸ்) பட்டம் வழங்கப்பட்டது. இவர், பிலிப்பைன்ஸில் உள்ள முகாமைத்துவத்திற்கன ஆசிய நிறுவகத்தில், பொது நிர்வாகத்தில் முதுகலைக் கற்கையினையும் பின்பற்றியுள்ளார்.
லால் சந்திரநாத் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் IBM 1130 கணினியைப் பயன்படுத்தும் போது ICT துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். பேராதெனிய பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் பயின்றகாலம் ஒரு மாயாஜால நேரம் என்று அவர் கூறுகிறார். இது சிறந்த கற்றல் காலம். அவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த விரிவுரையாளர்கள் இருந்தனர். அவர்கள் மின்சாரப் பொறியியலில் லாலுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை வழங்கினர். மேலும் லால் தொடர விரும்பிய பகுதி மின் மற்றும் மின்னணுப் பொறியியல் ஆக இருந்தது.
இவர் பல்கலைக்கழகத்தில் இறுதி இரண்டு ஆண்டுகளில் மின்னணுவியல் கற்றார். இவர் FORTRAN மற்றும் Pascal இல் கணினி நிரலாக்கத்தில் ஒரு அடிப்படைப் பாடத்தையும் பின்பற்றினார். சமிக்ஞை அமைப்புகள் மற்றும் தகவல்தொடர்புகள் மற்றும் புள்ளிவிவர சமிக்ஞைக் கோட்பாடு ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொண்டனர். இது புதிய பகுதிகளைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவியது – இவை FM தொடர்பாடல்களின் ஆரம்ப நாட்கள். கணினிகள் இறுதியில் மனித விதியை மாற்றும் என்பதை லால் சந்திரநாத் உணர்ந்தார். அது நிகழ்வதைக் காண அவர் வாழ்ந்தார்.
திரு. லால் சந்திரநாத் 1977 இல் பட்டம் பெற்றார் மற்றும் 1978 ஆம் ஆண்டில் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (பின்னர் DMS என நன்கு அறியப்பட்டது) எனும் ஒரு தொடக்க நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. ருவன் ரத்னதுங்க இருந்தார். மற்றும் அங்கு திரு. ராமதாஸ் மற்றும் திரு. பரமகுரு ஆகிய இரு பொறியியல் பட்டதாரிகள் இருந்தனர். திரு லால் சந்திரநாத் நான்காவது பணியாளராக இருந்தார். DMS தமது முதல் Wang கணினிகளை இலங்கையில் உள்ள தேயிலை நிறுவனங்களுக்கு விற்றது. இந்த காலகட்டத்தில் IBM மெயின்பிரேம் கணினிகளை விற்பனை செய்தது அத்துடன் மக்களுக்கு IT கற்பித்தது, ஆனால் DMS தான் தேயிலைத் தொழிலுக்கு ஒரு முழுமையான கணினித் தொகுப்பை உருவாக்கி கணினியுடன் ஒரு திருப்புமுனை தீர்வாக விற்றது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இது ஒரு பெரிய முன்னேற்றமாக இருந்தது. DMS முன்னோடியாக இருந்தது.
DMS மிகவும் வலுவான மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் திட்டங்களைப் பெறுவதற்கு ஒருபோதும் விரும்பத்தகாத எதையும் செய்யக்கூடாது என்பதனை முடிவு செய்ததனையும் திரு. லால் சந்திரநாத் நினைவுபடுத்துகிறார். DMS ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக இருக்க வேண்டும் என்று குழு விரும்பியது. அது தொழில்நுட்பத்தில் பிரகாசிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அணி ஒரு வலுவான பணி நெறிமுறையைக் கொண்டிருந்தது. அனைவரும் கடினமாக உழைத்தனர். DMS மாசசூசெட்ஸில் இணைக்கப்பட்ட வாங் லேபரேட்டரீஸ் என்ற நிறுவனத்துடன் ஆரம்பகால தொடர்பைக் கொண்டிருந்தது. அங்கு அவர்கள் முதல் சொற்செயலிகளை உருவாக்கி வந்தனர்.
அந்த நேரத்தில் கணினிகள் பெரும்பாலும் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் கணினிகளை சொற்செயலாக்கம் மற்றும் உரைச் செயலாக்கத்திற்குப் பயன்படுத்தினால், அது கணினிகள் பயன்படுத்தப்படும் முறையை மாற்றிவிடும் என்பதை கலாநிதி வாங் உணர்ந்தார். எனவே, வாங் ஆய்வுகூடங்கள் அலுவலக தகவல் அமைப்பு (OIS) என்ற கணினி அமைப்பை உருவாக்கின. இது சொற்செயலாக்கத்திற்கு உதவும்.
அந்த நேரத்தில் குறுங் கணினிகள் இருந்தன. DMS ஒரு வாங் குறுங் கணினி அமைப்பை தேசிய வணிக மேலாண்மை நிறுவனத்திற்கு (NIBM) விற்றபோது ஒரு இலக்கு அடையப்பட்டது. கனடாவின் கலாநிதி பில் ஸ்மித் NIBM இற்கு ஆலோசகராக இருந்தார். பலர் IT மற்றும் கணினிகள் பற்றி NIBM இல் பயிற்சி பெற்றனர். திரு. லால் சந்திரநாத் அவர்கள் பாடத்திட்டத்தையும் பயிற்சி மூலங்களையும் உருவாக்கியதாகக் கூறுகிறார். இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், பின்னர் கொழும்பு, பேராதெனிய, யாழ்ப்பாணம் மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களுக்கான பாடத்திட்டங்களை DMS எலெக்ட்ரானிக்ஸ் உருவாக்கியது.
1981 ஆம் ஆண்டில், Intel இலிருந்து ஒற்றை சிப் நுண்-செயலிகள் கிடைத்தன. அதற்கு முன்பே கம்பெனி மோஸ்டெக் 6502 நுண்செயலிகளை உருவாக்கியது. அவை அப்பிள் மற்றும் கொமடோர் கணினிகளில் இருந்தன.
அதன்பிறகு, DMS எலெக்ட்ரானிக்ஸ் நிறுவப்பட்டது, அது மைக்ரோ கம்ப்யூட்டர்களில் கவனம் செலுத்தியது. திரு. லால் சந்திரநாத் பொது முகாமையாளராக இருந்தார். இது இறுதியில் ஒரு பெரிய நிறுவனமாக மாறியது. தற்போது கூட அந்த நிறுவனம் கணினி ஒருங்கிணைப்பாளர்கள் என நன்கு அறியப்படுகிறது. அவர்கள் கொமடோர் கணினிகளைக் கொண்டு வந்தனர். கொமடோர் PET கணினியானது, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மலிவான மற்றும் குறைந்த விலையில் இருந்த கொமடோர்-64 கணினிகள் வீடுகளில் பயன்படுத்தப்பட்டன.
1983/1984 இல், DMS எலெக்ட்ரானிக்ஸ், வாங் ஆய்வுகூடங்களின் வழிகாட்டுதலுடன் ஒரு சிங்களச் சொற்செயலியை உருவாக்கத் தொடங்கியது. அதன்பிறகு தமிழ்ச் சொற்செயலியை உருவாக்கியது. இது அவர்களின் OIS கணினியில் வேலை செய்தது. இந்தக் கணினி வாங் OIS இற்காக உருவாக்கிய “பாலிகிளாட் உரை இயக்கி” என்று அழைக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் இதை 1985 இல் தொடங்கவிருந்தனர், ஆனால் IT வரலாறு ஆனது முதல் IT அறிவுசார் சொத்து வழக்குடன் உருவாக்கப்பட்டது. அப்போது மெட்ரோபொலிட்டன் லிமிடெட் நிறுவனத்தின் திரு. ஏ.கே. குமாரசேன இந்த கண்டுபிடிப்பு முதலில் தன்னுடையது என்று கூறி வழக்குத் தொடர்ந்தார். இது ஒரு கடினமான காலகட்டமாக இருந்தது. கிட்டத்தட்ட 1 ½ ஆண்டுகள் நீதிமன்றங்களில் கழிந்தன. அத்துடன் DMS இறுதியில் தயாரிப்புக்கான ஆர்வத்தையும் சந்தை வாய்ப்பினையும் இழந்தது. இந்த வழக்கு நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்த்து வைக்கப்பட்டது. பின்னர் DMS எலக்ட்ரானிக் கிராஃபிக் கார்டுகளைப் பயன்படுத்தி, சிங்கள மற்றும் தமிழ்ச் சொற்செயலிகளை உருவாக்கியது. இது சிங்கள எழுத்துக்களில் திருத்தங்களுடனான இஸ்பில்லா மற்றும் பாப்பிலாவுடன் சரியாகக் காண்பிக்கக்கூடியவாறு மூன்று நிலைகளையும் சாத்தியமாக்கியது.
அதன்பிறகு, DMS எலெக்ட்ரானிக்ஸ் ஆனது ஸ்கொயர் டி நிறுவனத்துடன் சேர்ந்து புரோகிராம் செய்யக்கூடிய லாஜிக் கன்ட்ரோலர்களைக் கொண்டு வந்தது. இது டயர் கோர்ப்பரேஷனில் டயர் சரிப்படுத்தும் திட்டத்திற்கு அவர்கள் பயன்படுத்தியது ஆகும். இதன் மூலம் அவர்கள் நியூமேட்டிக்ஸை மின்னணுவியல் மூலம் மாற்றினர். DMS எலெக்ட்ரானிக்ஸ் பின்னர் ஒரு முன்னணி விமான மென்பொருள் நிறுவனமான மெமொரெக்ஸ் டெலெக்ஸுடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸில் ஒரு பொதுவான பயனர் முனைய உபகரணங்களை (CUTE) நிறுவுவதற்கான அமைப்புகள் ஒருங்கிணைப்பு திட்டத்தில் பணியாற்றியது. 150 க்கும் மேற்பட்ட சாதனங்களை இணைத்தது. 2000 ஆம் ஆண்டில், அவர்கள் சம்பத் வங்கியில் மெயின்பிரேம் சுவிட்சை விண்டெல் செயலி அடிப்படையிலான ATM பரிவர்த்தனை சுவிட்சுடன் மாற்றினர்.
ஒட்டுமொத்தமாக DMS வெற்றிகரமாக உள்ளது என திரு. லால் சந்திரநாத் கூறுகிறார்; அதன் நிறுவனர் திரு. ருவன் ரத்னதுங்க, மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர் என்று அவர் கூறுகிறார். DMS சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் 1991 இல் Oracle உடன் கூட்டு சேர்ந்தது. Oracle, அடிப்படையிலான தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்றது மற்றும் இலங்கைக்கு தொடர்புசார் தரவுத்தளத் தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்தது. பின்னர், DMS கார்மென்ட் டெக்னாலஜிஸ் உருவாக்கப்பட்டது, இந்த நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்தது, இது ஆடைத் தொழிலுக்கு உதவியது. ஒட்டுமொத்தமாக, DMS இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, DMS ஒரு அற்புதமான கலாசாரத்தைக் கொண்டிருந்தது, இது மக்களை மேம்படுத்தியது. DMS இல் இருந்தவர்கள் வெளியே சென்று தங்களுக்கு சிறந்த தொழில்வாய்ப்பை உருவாக்கினர். இது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு “புதிய தோற்றத்தை” உருவாக்க உதவிய ஒரு பயணத்தில் தாம் இருந்தாக, என லால் சந்திரநாத் நினைவுபடுத்துகிறார். “விடயங்கள் சிறப்பாக இருந்திருக்கலாம்” “ஆனால் அது மோசமாக இருந்திருக்கலாம்” எனவும் அத்துடன் DMS நியாயமான முறையில் சிறப்பாக செயல்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.
CSSL, IOI
திரு. சந்திரநாத் எண்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையின் கணினிச் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அவர் 1999/2000 மற்றும் 2000/2001 காலங்களுக்கு CSSL இன் தலைவராக இருந்தார். தென்கிழக்கு ஆசிய பிராந்திய கணினி கூட்டமைப்பின் (SEARCC) கீழ் மென்பொருள் போட்டிகளுக்காக இலங்கை மாணவர்கள் அடங்கிய அணிகளுக்கு பயிற்சி அளிக்குமாறு திரு. யாச கருணாரத்ன அவரை வலியுறுத்தினார். திரு. லால் சந்திரநாத் 1989 முதல் 1994 வரை இந்த முயற்சியைத் தொடர்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அணிகளின் செயல்திறன் மேம்பட்டது. 1994 ஆம் ஆண்டளவில் பிராந்திய அணிகளிடையே இந்த போட்டியில் இலங்கை வெற்றிபெற முடிந்தது.
1992 இல் இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப பேரவையின் (CINTEC) தலைவராக இருந்த பேராசிரியர் வி. கே. சமரநாயக்க அவர்கள், சர்வதேச ஒலிம்பியாட் இன் இன்ஃபர்மேட்டிக்ஸ் (IOI) இன் மென்பொருள் போட்டிகளில் இலங்கை பங்கேற்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு மாலை தாமதமாக, பேராசிரியர் சமரநாயக்க திரு. லால் சந்திரநாத் மற்றும் DMS சாப்ட்வேர் டெக்னாலஜிஸைச் சேர்ந்த திரு. பாலிதா ரோட்ரிகோ ஆகியோர் CINTEC யிலுள்ள தலைவர் அலுவலகத்தில் சந்தித்து இலங்கை IOI போட்டிக்கு பங்கேற்க முடியுமா என்பதனை அறிய பெர்லினிற்கு (Berlin) (அது பின்னர் மேற்கு பெர்லின் ஆக இருந்தது) தொலைபேசி அழைப்பை மேற்கொண்டனர். பதில் உடன்பாடாக இருந்ததால், திரு. லால் சந்திரநாத் மற்றும் திரு. பாலிதா ரோட்ரிகோ ஆகியோர் இலங்கை மாணவர்களுக்கு IOI மென்பொருள் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினர். திரு. சந்திரநாத் CINTEC இன் தேசிய தகவல் ஒலிம்பியாட் குழுவின் தலைவராக இருந்தார் அத்துடன் 1992 முதல் 1996 வரை IOI போட்டிகளில் பங்கேற்ற அணிகளை வழிநடத்தினார். 1994 ஆம் ஆண்டில் அணி உறுப்பினர் சிபான் சவாஹிர் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், 1995 இல் இலங்கை தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. இது இலங்கை சிறந்து விளங்கக்கூடிய ஒரு துறையாகும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனைகள் குறித்து தாம் மகிழ்ச்சியடையவதாகவும் திரு. சந்திரநாத் கூறுகிறார்.